Published : 12 Feb 2020 11:22 AM
Last Updated : 12 Feb 2020 11:22 AM

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பெண் காவலர் மட்டுமே பணியாற்றும் மகளிர் காவல் நிலையம்: வழக்குகள் விசாரணையில் தேக்கம் - மகளிர் அமைப்புகள் குற்றச்சாட்டு

செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் (கோப்புப் படம்).

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் இருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு நீதி கிடைக்காமல் போகிறது என மகளிர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அனைத்து மகளிர் காவல் நிலையம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 15 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, பணியில் உள்ள ஆய்வாளர் மருத்துவ விடுப்பில் உள்ளார். பதவி உயர்வு பெற்று 2 உதவி ஆய்வாளர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு சென்றுவிட்டனர்.

இதேபோல், தலைமைக் காவலர், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களும் பணியிட மாறுதல் பெற்று சென்றுள்ளனர். இதனால், ஆய்வாளர் பொறுப்பை கூடுதலாக பெரணமல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கவனித்து வருகிறார். இதனால், கடந்த 2 மாதங்களாக ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் உள்ளார். அவரிடம், காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து பொறுப்பில் உள்ள ஆய்வாளர் கேட்டறிந்து தெரிந்துகொள்கிறார்.

பணியில் உள்ள காவலர் பெறப்படும் புகார் மனுக்களை ஆய்வாளரிடம் கொண்டு சேர்க்கவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக சென்று விடுகிறார். இதனால், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.

புகார் கொடுக்க செல்பவர்கள், காவல் நிலையத்தில் யாரும் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், ஏற்கெனவே பெறப்பட்ட சுமார் 750-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை முழுமை பெறாமல் கிடப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மோரணம், செய்யாறு, அனக்காவூர், பிரம்மதேசம், பெரணமல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 342 கிராமங்களில் பெண் களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு நீதி கிடைக்காமல் போவதாக மகளிர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனவே, பெண்களின் பாதுகாப்புக்காக திறக்கப் பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் படிப்படியாக நிரப்பப்படும்’’ என்றார். இரா.தினேஷ்குமார் 


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x