

பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் பழங்கால நாணயங்கள் குறித்து அரசு கலைக் கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆய்வு செய்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் அருகே அளேபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகிலேயே அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. கோயிலையும், பள்ளியையும் சுற்றி 5 ஏக்கர் பரப்பு கொண்ட மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர் விளை யாடுவது வழக்கம். அவ்வாறு விளையாடும்போது இப்பகுதியில் தொடர்ந்து மாணவர்கள் பார்வையில் பழங்கால செம்பு நாணயங் கள் தட்டுப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் எடுத்துச்சென்று தங்கள் ஆசிரியர் களிடம் காட்டியு ள்ளனர். இவை திப்புசுல்தான் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கியுள்ளனர். இவ்வாறு 37 செம்பு நாணயங்கள் இதுவரை கிடைத்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த, தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் தன் தலைமையிலான குழுவுடன் சென்று அளேபுரம் பள்ளி மற்றும் கோயில் வளாகத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டார். அப்போது 2 செம்பு நாணயங்கள் கிடைத்தன. மேலும், அவரது குழுவினர் ஏற்கெனவே மாணவர்கள் கண்டெடுத்த 37 நாணயங்களையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறும்போது, ‘சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் காலத்தில் அளேபுரம் பகுதியில் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. மேலும், இப்பகுதி வணிகம் சார்ந்த பகுதியாகவும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. நாணய தயாரிப்பு தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளமாக இப்பகுதியில் மண்ணில் அதிக அளவில் செம்புத் துகள்கள் கிடைக்கின்றன. இங்கு கிடைத்த நாணயங்களில் உருதுமொழி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சிற்றரசர்களின் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் உள்ளன. வரலாறு, கலச்சாரம், பண்பாடு உள்ளிட்டவை குறித்த ஆய்வாளர்களுக்கு இப்பகுதி மிகப்பெரும் வாய்ப்பாக இருக்கும். அளேபுரம் பகுதியில் ஆழமான மற்றும் விரிவான ஆய்வினை முறைப்படி நடத்தினால் அரிய பல வரலாற்று தகவல்கள் வெளிவரும். நாங்களும் இந்த நாணயங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.