

காரைக்கால் மாவட்டம் விழிதியூர் பகுதியில் நேற்று முன்தினம் இருதரப்பினரிடயே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 80-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழிதியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கடந்த 9-ம் தேதி அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், சுதாகர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை சிலர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சுதாகர் நிரவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விழிதியூர் பேட் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இப்பிரச்சினையின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் விழிதியூர் பேட் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை சுதாகர் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் இருதரப்பினருக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், விழிதியூர் பிரதான சாலை பகுதியில் இருதரப்பையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூடி, கட்டை, கம்புகள் மற்றும் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண் டனர்.
இந்த மோதலை தடுக்க முயன்ற ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த காவலர் பாபு, மற்றும் காவல் நிலைய காவலர்கள் கலிய பெருமாள், எழிலரசி ஆகியோர் காயமடைந்தனர். மோதலின்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பலராமன் என்பவர் தாக்கப்பட்டார். மேலும், 3 இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, காவலர் கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் 13-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். மேலும், முருகானந்தம் அளித்தபுகாரின் பேரில் 40 பேர் மீதும், பலராமன் அளித்த புகாரின்பேரில் 30 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழிதியூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக பலநாட்களாக இருதரப்பினரிடயே நீடித்து வந்த பிரச்சினையின் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.