

சேலத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது மற்றும் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குற்றவாளிகளை பிடித்து பொதுமக்களின் அச்சத்தை காவல் துறையினர் போக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மரவனேரி பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடந்து சென்ற கிருஷ்ணவேணி (84) என்பவரின் தங்க சங்கிலியை பறித்த ஞானசேகரன் (23) என்பவரை பொதுமக்கள் பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல, சில மாதங்களாக தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள், தங்க சங்கிலியை பறித்து செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது.
இதேபோல, வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்களும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஐந்து ரோட்டில் பிரபல நகை கடை அதிபர் வீட்டில் தங்க, வைர நகை கொள்ளை போனது. சின்னதிருப்பதியில் அடுத்தடுத்து வீடு புகுந்த மர்ம கும்பல் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது. சங்ககிரியில் சொகுசு பேருந்தில் ரூ.ஒரு கோடி மதிப்பு தங்க, வைர நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் நடந்தது.
சேலம் மாநகரில் பல்வேறு பகுதியில் போலீஸார் சிசிடிவி கேமரா பொருத்தி, திருடர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஆனாலும், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸார் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட, கிருஷ்ணன் கோயில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யாத நிலையில். கேமரா பதிவு குறித்து மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அம்மாப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்க நகை பறித்த இரண்டு மரம் நபர்கள் யார், நகை பறி கொடுத்த மூதாட்டி யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் திருட்டு மற்றும் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்வதோடு, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.