Published : 12 Feb 2020 10:54 AM
Last Updated : 12 Feb 2020 10:54 AM

வனவிலங்குகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 521.28 ச.கி.மீ.க்கு விரிவுபடுத்தப்படும் ஆனைமலை புலிகள் காப்பகம்

பொள்ளாச்சி

வனஉயிரின பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்திராகாந்தி வன உயிரின உய்விடமாக செயல்பட்டு வந்த இந்த சரணாலயம் 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி (டாப்சிலிப்), உடுமலை,அமராவதி ஆகிய 6 வனச்சரகங்களும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே காங்கயம், திருப்பூர் ஆகிய 2 வனச்சரகங்கள் என மொத்தம் 8 வனச்சரகங்கள் இந்த காப்பகத்துக்கு உட்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, கடமான், காட்டுமாடு, செந்நாய் என பல்வேறு விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.

பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் உள்ள புல்வெளி, சோலைகாடுகள், அரியவகை இருவாட்சி பறவைகள் ஆகியன குறித்த ஆய்வுக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வன உயிரின ஆய்வாளர்கள் இங்கு வருகின்றனர். இந்த வனப்பகுதியிலிருந்து அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்ட வனப்பகுதிக்கு உணவு மற்றும் இணை தேடி விலங்குகள் இடம்பெயர்கின்றன. கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தின் வெளிமண்டலம் மக்கள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி என்பதால், இடம்பெயரும் விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமாக அறிவிக்க வேண்டும் என வனஉயிரின ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி 521.28ச.கி.மீ. பரப்பளவை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. அதனுடன் இணைக்க வேண்டிய பகுதிகள்குறித்து வனத்துறை ஆய்வு மேற்கொண்டது. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் உள்ள 67.64 ச.கி.மீ. திண்டுக்கல்வனக்கோட்டத்தில் 124.11 ச.கி.மீ. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் 179.04 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட வருவாய் கிராமங்களுடன் கொடைக்கானல் வனக்கோட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, குதிரையாறு, வந்தரவு உள்ளிட்ட 14 வனக்காவல் சுற்றுகள்அடங்கிய 150 ச.கி.மீட்டர் வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருப்பூர் வனக்கோட்டத்தின் வெளிமண்டலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறைப்படி இணைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை, புலி, சிறுத்தை, செந்நாய். மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடியும், இணை தேடியும் அருகில் உள்ள கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்துக்குள் 10 கி.மீ. வரை பயணிக்கின்றன. இடம்பெயரும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்காகவும், வாழ்வாதார வசதிக்காகவும் அந்த வனப்பகுதிக்குள் நீர்நிலைகள் மேம்பாடு, வனவிலங்கு பாதுகாப்பு, வேட்டைத்தடுப்பு முகாம், வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கான நிதி வசதியினை தேசிய புலிகள் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு கொடைக்கானல் வனப்பகுதியின் சில பகுதிகளை ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைத்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால்,ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள 14 வனக்காவல் சுற்றுக்கு 14 வனக் காப்பாளர்கள், 14 வனக் காவலர்கள், 4 வனவர்கள், 2 வனச்சரக அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 958 ச.கி.மீட்டரில் இருந்து 1479 ச.கி.மீ., ஆக அதிகரிப்பதுடன் வனச்சரகங்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்கிறது’ என்றனர். எஸ்.கோபு


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x