Published : 12 Feb 2020 10:54 AM
Last Updated : 12 Feb 2020 10:54 AM

கல்லாறு பழப் பண்ணையை முற்றுகையிடும் காட்டு யானைகள்: பலா பழங்களை தேடி வருவதால் பாதுகாப்பு தீவிரம்

மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையை காட்டு யானைகள் சுற்றி வருவதால், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மலையின் அடிவாரத்தில் கல்லாறு என்னுமிடத்தில் அமைந்துள்ளது தமிழக அரசின் தோட்டக்கலை பழப் பண்ணை. இங்கு மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், செர்ரி, வெண்ணைப்பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வேறுபழ வகைகளும், அரிய வகைமலர்கள் மற்றும் மூலிகைச் செடிகளும் செழித்து வளர்கின்றன.

மலையடிவாரத்தில் உள்ள இந்த பழப் பண்ணையை சுற்றி யானைத்தடுப்பு சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், இப்பகுதியை நோக்கி இரவு நேரங்களில் படையடுக்கும் காட்டு யானைகள், மின் வேலி கம்பிகளை சாய்த்து துண்டித்துவிட்டு, உள்ளே புகுந்து விடுகின்றன.

தற்போது பலா மரங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளதால், இதன் வாசனைக்கு ஈர்க்கப்படும் யானைகள் பண்ணையை முற்றுகையிட்டுவருகின்றன. இதனால் கலக்கமடைந்துள்ள பழப்பண்ணை நிர்வாகத்தினர், மரங்களிலேயே பழுத்து, அழுகி, மணம் பரப்பும் பலா பழங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த சோலார் மின்வேலிகளை மீண்டும் சரி செய்வதுடன், பண்ணையை நோக்கி வரும் யானைகளை விரட்டுமாறு வனத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x