

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கு, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
கோவை அருகே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே 24-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 5 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் கடந்த ஜன.28-ம் தேதி வழங்கப்பட்டது.
அப்போது, கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி, பாலியல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாலும், அதிகபட்ச தண்டனை வழங்க முடியாததாலும், முக்கிய வழக்கு என்பதாலும், இந்த வழக்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, வழக்கு விசாரணையை மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, 5 பேருக்கும் வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தார். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் 5 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றனர்.