

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாகச் சென்ற விரைவு ரயில்களில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாகச் செல்லும் விரைவு ரயில்களில் கஞ்சா கடத்துவதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில். நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவியுடன் திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக சென்ற விரைவு ரயிலில் சோதனை செய்தபோது சுமார் 46 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் மதுரையைச் சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சா லவராஜூ ஆகியோரை கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா சென்ற விரைவு ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்து 29 பார்சல்கள் கொண்ட 56 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த தவமணி (55), செல்வம் (33) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இருவரையும் வேலூர் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம், கஞ்சா பார்சல் எங்கிருந்து யாருக்கெல்லாம் கடத்திச் செல்லப்படுகிறது என்பது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.