

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் அமையவுள்ள பெட்ரோகெமிக்கல் ஆலையால் விவசாயிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசு இ-வலைதள சந்தையில் (ஜெம்) அதிக அளவில் ஈடுபட்டு பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் ‘ஜெம் சம்வாத்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பெஞ்சமின், தொழில்துறை செயலர் என்.முருகானந்தம், சிறு குறு தொழில்கள் துறை செயலர் ராஜேந்தர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:
சிறு குறு நிறுவனங்கள் அனைத் தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இதனால், வருமான வரி பிரச்சினை ஏதும் வராது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு முதல்வர் பழனிசாமி சென்றபோது, ஹால்டியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தினர் அவரை சந்தித்தனர். அப்போது ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூரில் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு மையம் அமைப்பதாக கூறியுள்ளனர். இதனால் வேளாண் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பி.பெஞ்சமின் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள 50 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அரசு மின்னணு சந்தையில் பதிவு செய்ய வேண்டும். தற்போது 3 ஆயிரம் நிறுவனங்களே இதில் பதிவு செய்துள்ளன. மற்றவர்களும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் கருத்தரங்கங்கள் நடத்த வும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.