

புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடி இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் எழுதினார். இச்சூழலில் சட்டப்பேரவையில் அவருக்கு பதில் தரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வரும், தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என பாஜக மற்றும் துணை நிலை ஆளுநரும் கூறியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர ஆளும் கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிரண்பேடி அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக நேற்று (பிப்.11) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "சட்டப்பேரவை மரபு காரணமாக நாளை கூடும் சட்டப்பேரவையில் பதில் தரப்படும்" என்று குறிப்பிட்டார். இதன் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வருமா என்பது இன்று தெரியவரும்.
தவறவிடாதீர்!