

மதுவிலக்கு பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா சுகாதாரத் துறையில் 22 அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் பேசி முடித்ததும் திமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர்.
முதல்வரின் அறிவிப்புக்கு கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்து பேசி முடித்ததும் அனுமதி அளிப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார். அதை ஏற்க மறுத்த ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர், உடனே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அனுமதி மறுப்பு
அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனை பேச அழைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளி நடப்பு செய்தனர்.
முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து செ.கு.தமிழரசன், தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஏ.ராமசாமி (புதிய தமிழகம்), எம்.கலையரசு (பாமக), என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்), சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.
அவர்கள் பேசி முடித்ததும் அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.விஜயதாரணி (காங்கிரஸ்), ஜவாஹிருல்லா (மமக), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் எழுந்து மதுவிலக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், ‘‘நீங்கள் எழுப்பிய பிரச்சினைக்கு ஏற் கெனவே பதிலளித்து விட் டேன். உங்களது கோரிக்கை களை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசுங்கள்’’ என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் தமாகா வில் இணைந்துள்ள காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்கள் என்.ஆர்.ரங்கராஜன், ஜான் ஜேக்கப் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.