Last Updated : 11 Feb, 2020 03:22 PM

 

Published : 11 Feb 2020 03:22 PM
Last Updated : 11 Feb 2020 03:22 PM

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஆளுநர் அழைத்ததால் பங்கேற்காத தலைமைச் செயலாளர்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திமுக, அதிமுக எம்எல்ஏக்கள்  

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உள்ளடக்கிய நகர்ப்புற மேம்பாடு வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று (பிப்.11) நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை உள்ளடக்கிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், சிவா, அன்பழகன், ஜெயமூர்த்தி, பாஸ்கர், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ஜூன் சர்மா, இணை தலைமைச் செயல் அதிகாரி மாணிக்தீபன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி இயக்குநர்கள், பல்வேறு துறைச் செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவரும், தலைமைச் செயலருமான அஸ்வனி குமார், கருத்தரங்க கூடத்துக்கு வந்து, அங்கிருந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம், "ஆளுநர் அழைத்திருக்கிறார். ஆகவே அங்கு சென்று அவருடனான சந்திப்பை முடித்துவிட்டு 10 நிமிடத்தில் வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, "புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசு பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் எந்தெந்த திட்டப்பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வருகிறது, எந்தெந்த பணிகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது" என்றார்.

அவரைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ சிவா பேசும்போது, "ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? எந்தெந்த திட்டப் பணிகளைச் சேர்த்துள்ளீர்கள்? இந்தியாவில் பல மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதுச்சேரியில் திட்டப் பணிகளே தொடங்கப்படவில்லை" என்றார்.

அப்போது அதிகாரிகள், ''மத்திய அரசு ரூ.100 கோடியும், மாநில அரசின் பங்களிப்பு நிதி ரூ.60 கோடியும் என மொத்தம் ரூ.160 கோடி நிதி தற்போது இத்திட்டத்தில் இருக்கிறது'' என்றனர்.

தொடர்ந்து சிவா எம்எல்ஏ, ''புதுச்சேரியில் நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் பணம் இருந்தும் ஏன் திட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஜெயமூர்த்தி எம்எல்ஏ பேசுகையில், "கூட்டம் முதலில் அறிவிக்கப்படுகிறது. பிறகு தள்ளி வைக்கப்படுகிறது. இதுபோல் 3, 4 முறை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் திட்டத்துக்கு தலைவரே தலைமைச் செயலாளர்தான். அவரே இங்கு இல்லை. அவர் இல்லாமல் கூட்டம் தேவையா? மத்திய அரசிடம் இருந்து நிதி வந்தும் ஏன் காலத்தோடு பணிகள் தொடங்கப்படவில்லை?

என்னென்ன திட்டங்களை முடித்துள்ளீர்கள்? எனது தொகுதிக்குட்பட்ட தேங்காய்த்திட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் என்னென்ன திட்டங்கள் வரும், வராது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்தக் கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டு கூட்டப்பட்டுள்ளது. ஆனால் திடீரென ஆளுநர் அழைத்தார் என்று தலைமைச் செயலர் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுள்ளார். அவர் வராதது வருத்தம் அளிக்கிறது. ரூ.160 கோடி பணம் வந்தும் ஏன் இன்னும் செலவிடப்படவில்லை?" என்று கேட்டார்.

தொடர்ந்து எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், பாஸ்கர் ஆகியோரும் தலைமைச் செயலாளர் இல்லாமல் எதற்கு கூட்டம், மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் இந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்காமல் சென்றார் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தலைமைச் செயலாளர் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறி லட்சுமிநாராயணன், சிவா ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து அன்பழகன், பாஸ்கர் ஆகியோரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப்பகுதியை மேம்படுத்த, மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறி, இதுவரை ரூ.200 கோடி நிதி வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு தனது பங்களிப்பு நிதியைக் கொடுக்காமலும், எம்எல்ஏக்களின் கருத்தைக் கேட்காமலும், அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கிறது.

குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வராமல், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிக்கு மட்டுமே திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தலைமைச் செயலாளர்தான் தலைவர். அவரே இல்லாமல் ஏன் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது? ஆகவே திட்டமிட்டே மக்கள் பிரதிநிதிகள் அவமதிக்கப்படுகின்றனர்" என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் கூறும்போது, "ஸ்மார்ட் சிட்டி தலைவரான தலைமைச் செயலர் இந்தக் கூட்டத்துக்கு வராமல் ஆளுநர் அழைப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆகவே, அவர் இல்லாதபோது இந்தக் கூட்டத்தை நடத்தி எந்தப் பயனும் இல்லை. இத்திட்டம் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் அவரிடம்தான் உள்ளன. அவரது கையெழுத்து இல்லாமல் எந்தத் திட்டப்பணிகளும் நடைபெறாது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரே ஒரு திட்டம் கூட நிறைவேற்றப்பாடமல் இருப்பதற்குக் காரணம் தலைமைச் செயலாளர்தான். குறிப்பாக புதுச்சேரியில் மக்களுக்கான எந்தவொரு திட்டமும் நடைபெறக்கூடாது என்று அவர் மிகவும் குறியாக உள்ளார்" என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து சில மணிநேரம் கழித்து வெளிநடப்பு செய்த எம்எல்ஏக்கள் சிவா, லட்சுமி நாராயணனைத் தொடர்ந்து அன்பழகன், பாஸ்கரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன் பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x