Published : 11 Feb 2020 01:20 PM
Last Updated : 11 Feb 2020 01:20 PM

ரஜினியுடன் கூட்டணி அமைப்பீர்களா?- ராமதாஸ் மழுப்பல் பதில்

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிப்பார். அவருடன் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று தமிழருவி மணியன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மழுப்பலாகப் பதிலளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு அறிவித்தது முதல் தமிழக அரசியல் ரஜினியைச் சுற்றி சுழலும் நிலை உருவாகியுள்ளது. ரஜினி சிறிய பேட்டி கொடுத்தாலும் அதற்கு ஆதரவு, கடும் எதிர்ப்பு என இரு நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவேன் என ரஜினி ஏற்கெனவே கூறிய நிலையில், அவர் விரைவில் கட்சியைத் தொடங்குவார் எனத் தகவல் வெளியானது.

ரஜினியின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிழல் நிதி அறிக்கை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ரஜினியுடன் கூட்டணி குறித்து ராமதாஸிடம் வளைத்து வளைத்துக் கேள்வி எழுப்பினர். அத்தனைக் கேள்விகளுக்கும் ராமதாஸ் மழுப்பலாக சிரித்தபடி பதிலளித்தார்.

தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில் 2021-ல் ரஜினி தொடங்கும் கட்சியில் பாமக கூட்டணியில் இணையும் என்று கூறியுள்ளார். இதுவரை பாமகவிடம் இருந்து பதில் இல்லையே?

இந்தத் தம்பி கேட்கும் கேள்வி மிக முக்கியமான கேள்வி. மிக மிக முக்கியத்துவமான கேள்வி.

அது பேசுபொருளாக இரண்டு நாளாக இருக்கும் நிலையில் பாமக மவுனமாக உள்ளதே?

அதாவது, அது முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்பதால் அதுகுறித்துப் பதில் அளிக்கவில்லை.

அந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லையா? ரஜினியுடன் சேர்வது முக்கியத்துவம் இல்லையா?

இப்போது அதுபற்றி எப்படிப் பேசுவது? அவர் கட்சியே தொடங்கவில்லை. கட்சி தொடங்கிய பின்னர் கேட்டால் அதுகுறித்துக் கருத்துச் சொல்வோம். தமிழருவி மணியன் கருத்துச் சொல்லியிருக்கிறார். கருத்துச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. அவருக்குத் தோன்றிய கருத்தைச் சொல்லியிருக்கிறார். இப்போது நாங்கள் அதற்கு என்ன சொல்ல முடியும்.

பொதுவாக எது இருந்தாலும் ட்விட்டரில் ரியாக்ட் செய்வீர்கள். கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக எதிர்த்தீர்கள். இப்போது ரஜினி குறித்த உங்கள் நிலைப்பாடு?

கொஞ்சம் பொறுங்களேன். முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். கட்சி ஆரம்பித்த பிறகு அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்து பின்னர் சொல்கிறோம்.

அப்படியானால் உங்கள் மவுனத்தை சம்மதமாக எடுத்துக்கொள்ளலாமா?

அது உங்கள் கொள்கை. உங்கள் கருத்தாக இருக்கலாம்.

அப்படியானால் கட்சி ஆரம்பித்தவுடன் கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

அது உங்கள் யோசனையாக இருந்தால் அது குறித்து யோசிக்கிறோம்.

பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்று தமிழருவி மணியன் சொல்லியிருக்கிறாரே?

இல்லை. பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பேட்டியின்போது ராமதாஸ் வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்தினார்.

ராமதாஸ் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதிமுகவுடன் சமீப காலமாக உரசல் போக்கு உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது திமுக எதிர்ப்பில் இருக்கும் ராமதாஸ் அதில் இணைய வாய்ப்புள்ளது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x