

வங்கியில் பெற்ற கல்விக் கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறு நெருக்கடி அளிப்பதாக பொறியியல் மாணவி புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பிரபா(23), வருவாய் அலுவலர் சுகுமாரிடம் நேற்று மனு அளித்து கூறியதாவது:
திருப்பூர் இந்தியன் வங்கி கிளையில், பொறியியல் படிப்புக்காக கடன் கோரி விண்ணப்பித்தேன். தந்தை இல்லாததால், உறவினர் சொத்துப்பத்திரம் ஏதேனும் ஒன்றுடன் ஜாமீன் கையொப்பமிட்டால் கடன் கிடைக்கும் என்றனர். இதையடுத்து, உறவினர் ஒருவரின் பத்திரத்தை பெற்று அளித்தபோது, ரூ.2 லட்சத்து 69200 கடன் கிடைத்தது. இதை வைத்து பொறியியல் படிப்பு முடித்தேன்.
கடன் வாங்கியது முதல் ரூ.1000 வீதம் மாதந்தோறும் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். பொறியியல் படிப்பை 2017ம் ஆண்டு முடித்துவிட்டு, வேலை கிடைக்காததால், பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தேன்.
கடந்த சில மாதங்களாக வங்கிக் கடனை செலுத்த முடியவில்லை கல்விக்காக பெற்ற வங்கிக் கடன் தொகையை, வரும் 15ம் தேதிக்குள் ரூ.3 லட்சத்து 90000 மற்றும் வட்டியை செலுத்த வேண்டும் என்று . கடந்த 5-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சிபில்-டேட்டா(CIBIL-DATA) வலைதளத்தில் முறைதவறிய கடனாளி என்று பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குடும்பச் சூழல் கருதி , எனது கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, ‘கொடுத்த கடனுக்கு வழக்கமாக அனுப்பப்படும் நோட்டீஸ் தான் இது. இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருப்பதால், அவர்களிடம் பேசி மாணவி பிரபாவுக்கு உரிய கால அவகாசம் பெற்றுத்தரப்படும்' என்றார்.