

பருவநிலை மாறுதல்களை எதிர் கொள்ளும் வகையில் காவிரி கழிமுகப் பகுதியில் ரூ.1,560 கோடியில் கட்டுமானங்களை நவீனப்படுத்தி மேம்படுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் பருவநிலை மாறுதலுக்கான தேசிய செயல்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய நீர்க் குழுமத்தின் வழிமுறைப்படி, உப வடிநில மேம்பாட்டுப் பணிகள் மூலம் பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ளும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேசிய அளவில் 3 உப வடிநிலங்களுக்கான அறிக்கையை ஆசிய வளர்ச்சி வங்கி தயாரித்துள்ளது.
இதன்மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரில் ஏற்படும் தாக்கத்தை கண்டறிய முடியும். ஆசிய வளர்ச்சி வங்கியால் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் காவிரி கழிமுகப்பகுதியும் ஒன்றாகும்.
காவிரி கழிமுகப் பகுதியின் கடைமடை மதகுகளில் இருந்து 25 கி.மீ. நீளத்துக்கு மேலான நீரோட்டப்பகுதி சமநிலையில் உள்ளது. இதனால் வெள்ள நீர் வடிவது கடினமாக உள்ளது. மேலும், வெள்ள நீர் கடலில் உட்புகுவது தடுக்கப்படுவதுடன், விவசாய நிலங்களில் உப்பு நீர் ஊடுருவுவதும் அதிகரித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்துவதால் கடலோர நிலப்பகுதிகளின் பாது காப்பு உறுதி செய்யப்படுகிறது. நிலத்தடி நீரும் மேம்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள காவிரி, வெண் ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கீழ்கொள்ளிடம் அணைக் கட்டை சுற்றியுள்ள 4.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இத்திட்டத்துக்கான உத்தேச மதிப்பீடு ரூ.1,560 கோடியாகும். இதில், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1,092 கோடி கடன் வழங்கும். மீதமுள்ள ரூ.468 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக காவிரி கழிமுகப் பகுதியில் கீழ்வெண்ணாறு அமைப்பில் உள்ள அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனாறு வடிகால், வேதாரண்யம் கால்வாய் ஆகியவற்றில் மேம்பாட்டு பணிகள் தனித்திட்ட பணியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
கீழ்வெண்ணாறு அமைப்பின் விரிவான திட்ட அறிக்கை ரூ.840.63 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசால் ஒப்புதல் வழங் கப்பட்டுள்ளது. வெள்ளையாறு மற்றும் பாண்டவையாற்றில் ரூ.257.38 கோடி மதிப்பிலான பணி களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ள துடன், இதற்கான ஒப்பந்த புள்ளி களை கோர அரசு உத்தரவிட்டுள் ளது. வெள்ளையாறு, பாண்டவை யாறு மற்றும் இறவை பாசன திட்டங் களுக்கான ஆவணங்கள், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.