Published : 11 Feb 2020 08:42 AM
Last Updated : 11 Feb 2020 08:42 AM

மாவட்டவாரியான ஆலோசனை கூட்டம் தொடங்கியது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் - 14 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. உடன் துணை ஒருங்கிணைப் பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அமைச்சர்கள். படம்: க.பரத்

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு 14 மாவட்டஅதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தற்போதே தயாராகி வருகிறது. அதற்காக, மாவட்டவாரியான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தி லிங்கம், அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

காலை 10.30 மணிக்கு கரூர்,தஞ்சை வடக்கு, தெற்கு, நாகை,திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் மாலை 4.30 மணிக்கு மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நிர்வாகிகளுக்கு பாராட்டு

ஒரு மாவட்டத்துக்கு அரை மணி நேரம் என்ற அடிப்படையில் கூட்டம் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், பகுதி, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிக அளவில் அதிமுக வெற்றி பெற்ற மாவட்டங்களின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி, ‘‘கட்சியினர் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.

இனி மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து உரையாட வேண்டும். கட்சியை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மீது ஏதேனும் குறைகளோ, கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளோ தெரிவிக்க விரும்பினால் அதை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் மூலம் எங்கு நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். அப்பகுதிகளில் கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர தேவையானவற்றை மாவட்டச் செயலாளருடன் இணைந்து நிர்வாகிகள் செயல்படுத்த வேண்டும். பேரூராட்சி, நகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தோல்விக்காக யாரையும் கடிந்து கொள்ளவில்லை என்றும், கட்சியினரை அரவணைக்கும் விதமாகவே ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுரைகளை வழங்கியதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஏப்ரலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அதற்கான அடிப்படை பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படியும், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இன்று..

இரண்டாவது நாளான இன்று காலையில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x