Published : 11 Feb 2020 08:38 AM
Last Updated : 11 Feb 2020 08:38 AM

என்எல்சியில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதில் தவறு நடந்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மிகவும் பாதுகாப்பான பகுதியான என்எல்சியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதில் தவறு நடந்துள்ளது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய சோதனைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும்இல்லை. தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எங்கு சோதனை நடத்த வேண்டும் என்பதை வருமானவரித் துறைதான் முடிவு செய்கிறது. துறை ரீதியாக ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாஜக எப்படி பொறுப்பேற்கும்?

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) மிகவும் பாதுகாப்பான பகுதி. கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சராக நான் இருந்தபோது அங்கு சென்றிருக்கிறேன். என்னுடன் என்எல்சிதலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்தனர்.

ஆனாலும் தொப்பி, காலுறைபோன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தே நான் அங்குசெல்ல முடிந்தது. திரைப்பட படப்பிடிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டுயாரும் பங்கேற்க முடியாது. எனவே, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதில் தவறு நடந்திருப்பதாக கருதுகிறேன். அதனால்தான் பாஜக போராட்டம் நடத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x