

சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து முடிவெடுக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கோரியது. இதையடுத்து வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒருவாரத்துக்கு தள்ளிவைத்தது.
இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் காந்தி சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகன ஓட்டிகளுக்கு இடையூ றாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், அரசு முடிவெடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ் அக்னி கோத்ரி, சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தர விட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்டு தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.