

கல்லூரி வளாகம் தொடங்கி சாலை வரை பீர் பாட்டில், கட்டைகளால் ஒருவொரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளது மதுரை உயர் நீதிமன்றம்.
திருச்சி மாவட்டம் பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் இயந்திரவியல் படிக்கும் 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோதிக்கொண்டனர்.
அப்போது கல்லூரி வளாகம் தொடங்கி சாலை வரை மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும், பீர் பாட்டில்களாலும் தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதல் தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையேற்றுக் கொண்ட நீதிபதி, மாணவர்கள் 28 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் 28 பேரும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொது வார்டில் பிப். 22-ல் சுத்தம் செய்ய வேண்டும். அது தொடர்பாக மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வரிடம் கடிதம் பெற்று பிப். 26-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.