Last Updated : 10 Feb, 2020 05:44 PM

 

Published : 10 Feb 2020 05:44 PM
Last Updated : 10 Feb 2020 05:44 PM

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: 4 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும்; மத்திய அமைச்சரைச் சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

புதுடெல்லி

வேளாண் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக, மத்திய அரசிடமிருந்து 4 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று சேலத்தில் அறிவித்திருந்தார். அதனை வலியுறுத்தி முதல்வர் எழுதிய கடிதத்தை டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் இன்று (பிப்.10) தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

அதன் பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"முதல்வரின் இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சியில் இருக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் பெருத்த கவலையில் அதிர்ச்சியில் இருக்கிறார். நடக்காததையெல்லாம் நிகழ்த்திக் காட்டி முதல்வர் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக மக்களின் நிலைமையை விளக்கும் வகையில், முதல்வரின் கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்தோம். கடிதத்தைப் படித்து அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். "நல்ல விஷயத்தைச் சொல்கிறோம்" என அவர்கள் சொல்லியிருக்கின்றனர். 4 நாட்களில் நல்ல பதிலை முதல்வருக்குத் தெரிவிக்க இருக்கின்றனர்''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளாரே?

இது என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. இதுகுறித்து ஆராய்ந்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்.

ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்படுமா?

தொடர் நடவடிக்கையாக இன்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கள நிலவரத்தை மத்திய அமைச்சகத்திற்கு விளக்கியிருக்கிறோம். அதிகபட்சம் 4 நாட்களில் ஒரு நல்ல பதிலைத் தருவதாக, மத்திய அரசு கூறியிருக்கிறது. நேர்மறையான பதிலை முதல்வருக்குக் கடிதமாக எழுதுவோம் எனச் சொல்லியிருக்கின்றனர்.

வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

முதல்வர் அறிவித்ததே கொள்கை முடிவுதான். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தவர். முதல்வர் அறிவித்துவிட்டாலே அது கொள்கை முடிவுதான். இது வழக்கமான ஒன்று. சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்ற கே.என்.நேருவுக்கு இது தெரியாதது வருத்தமாக இருக்கிறது.

விவசாயிகள் பயனடையும் இந்த விஷயத்தில் ஸ்டாலின் மட்டும் கவலையடைந்திருப்பதாக ஏன் விமர்சிக்கிறீர்கள்?

அவருக்கு நாட்டில் நல்லது நடந்தாலே பிடிக்காது. அவருக்கு எப்போதும் கெட்டது நடக்க வேண்டும். கெட்டது நடக்க இந்த ஆட்சியில் விடவில்லை. அவர்களுடைய ஆட்சியில் கெட்டதாகவே நடந்தது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x