Last Updated : 10 Feb, 2020 05:28 PM

 

Published : 10 Feb 2020 05:28 PM
Last Updated : 10 Feb 2020 05:28 PM

மதுரை, நெல்லை மாவட்டங்களில் சாலைகளை சீரமைக்கக்கோரி வழக்கு: நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நெல்லை மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. புது சாலை அமைக்கும்போது சம அளவில் தார் மற்றும் ஜல்லி கலந்து ஏழரை செ.மீட்டர் உயரத்திற்கு சாலை அமைக்க வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றாமல் முறையாக தார், ஜல்லி கலக்காமல் தரமற்ற சாலைகள் அமைக்கின்றனர். இதனால் புதிய சாலைகள் சில வாரத்திலேயே சேதமடைகின்றன.

இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகளவில் நடைபெறுகின்றன. சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்று சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதேபோல் தரமற்ற சாலை அமைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே ஒவ்வொரு சாலையிலும் அதன் உறுதித்தன்மை, காலாவதி குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும். மதுரை, நெல்லை மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகளை முறையாக சீரமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர், நெல்லை, மதுரை நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x