

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் துறை அமைச்சர் மவுனம் கலைக்க வேண்டும். இல்லையென்றால் கூடிய விரைவில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கேஆர்.ராமசாமி எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
இவ்வளவு நாள் ஒற்றுமையாக இருந்தவர்கள் இன்றைக்கு டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று சொல்லியிருப்பது
பாஜக - அதிமுகவினர் இடையே ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது மக்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழக மக்களிடம் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் துறை அமைச்சர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறார். அவர் கூடிய விரைவில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும். முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரையும் மிரட்டி கையெழுத்து பெறவில்லை. வருகின்ற 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்