

இட ஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனிநபருக்கும் அடிப்படை உரிமை இல்லை. இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பால், இட ஒதுக்கீடு தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.10) தன்னுடைய முகநூல் பக்கத்தில், "மத்திய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்தே இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது!
மத்திய அரசில் உள்ள அமைச்சர்களும், அந்த மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது.
ஆகவே பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல், சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்