Published : 10 Feb 2020 10:39 AM
Last Updated : 10 Feb 2020 10:39 AM

பசுமைக்குடிலில் அதிக லாபம் தரும் குடைமிளகாய்: பூச்சி மருந்துக்கான வரியை குறைக்க கோரிக்கை

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள தளி, கெலமங்கலம், ராயக் கோட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் மண் வளத்துடன் இதமான தட்பவெப்பநிலை காணப்படுவதால் பசுமைக் குடிலில் சொட்டுநீர் பாசனமுறை சாகுபடியில் அதிக லாபம் தரும் குடைமிளகாய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போதைய நவீனகால உணவு பழக்க வழக்கத்தில் பெருநகரங்களில் உள்ள உணவகங்களில் மட்டுமின்றி சிறிய நகரங்களில் உள்ள உணவகங்களிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் குடைமிளகாய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓசூர் பகுதியில் விளையும் தரமான, சுவைமிகுந்த குடைமிளகாய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

குடைமிளகாய் சாகுபடியில் அதிக விலையில் நாற்றுகள் வாங்கி நடவு செய்வது, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் அதிகமிருப்பினும், முறையாக பராமரித்து வந்தால் ஒரு ஏக்கர் மகசூலில் செலவுகள் போக சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக குடைமிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து கெலமங்கலம் ஒன்றியம் எம்.அக்ரஹாரம் கிராமத்தில் குடைமிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி சாம்பசிவரெட்டி கூறியதாவது:

பசுமைக்குடிலில் சொட்டுநீர் பாசன முறையில் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய 3 நிறங்களில் குடைமிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சிவப்பு நிற குடைமிளகாய்க்கு பெங்களூரு போன்ற பெருநகர சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு விளையும் தரமான குடைமிளகாய்கள் பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் செல்கிறது. குடைமிளகாய் நாற்று தயாராக 45 நாட்கள் தேவைப்படுகிறது. அதன் பிறகு 1.50 அடிக்கு ஒரு நாற்று என்ற வீதத்தில் ஒரு ஏக்கரில் 16,000 நாற்றுகளை நடவு செய்யலாம். சாணம், வேப்பம் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு உள்ளிட்ட கலவையில் உரமிடும் போது மகசூல் அதிகரிக்கும். குடைமிளகாய் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களில் பூ விட்டு 90 நாட்களில் பலன் கொடுக்க தொடங்கி விடும். சுமார் 80 கிராம் முதல் 350 கிராம் வரை எடையுள்ள குடைமிளகாய்களை, 240 நாட்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். நல்ல பராமரிப்பு செய்து வந்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு அறுவடைக்கு 50 டன் முதல் 70டன் வரை உற்பத்தி கிடைக்கும். மொத்த விற்பனையில் ஒரு கிலோ தரமான குடைமிளகாய் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவு செய்தாலும் குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. 90 நாட்களில் ஆரம்பிக்கும் குடைமிளகாய் அறுவடை வாரம் இருமுறை என தொடர்ந்து 240 நாட்கள் வரை நீடித்து பலன் கொடுக்கும். காய்கறி தோட்டப்பயிர்களில் அதிகளவு லாபம் தரும் பயிராக குடைமிளகாய் விளங்குகிறது.

குடைமிளகாய் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் எலிகள் சேதப்படுத்தி விடுகின்றன. அதேபோல லத்திப்புழு மற்றும் சிறு பூச்சிகளாலும் குடைமிளகாய் செடிகள் தாக்கப்பட்டு மகசூல் குறைந்து விடுகிறது.

கடைகளில் பூச்சி மருந்துகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல உரம் மற்றும் விவசாயம் சார்ந்த உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி செலுத்தவேண்டி உள்ளது. ஆகவே மத்திய மாநில அரசுகள் பூச்சி மருந்து, உரம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 2 அல்லது 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தளி துணை தோட்டக்கலை அலுவலர் பி.சுப்பிரமணியன் கூறுகையில், குடைமிளகாய் சாகுபடியில் இந்திரா மற்றும் பஜாகா ஆகிய இரண்டு ரகங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இவற்றை வெட்டவெளியில் சாகுபடி செய்யும் போது 15 டன் முதல் 20 டன் வரையே மகசூல் கிடைக்கும் அதேவேளையில் பசுமைக்குடிலில் குடைமிளகாய் மகசூல் 50 டன் முதல் 70 டன் வரை கிடைக்கும். குடைமிளகாய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பசுமை குடில் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலமாக ரூ.16.88 லட்சம் வரை 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. அதேபோல சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். ஜோதி ரவிசுகுமார்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x