

ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை குறைக்கவேண்டுமென மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற விவாதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘‘குளிர்பதனம் அல்லாத சாதாரண ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
கூலிகள், விவசாயிகள், கைத்தறித் தொழிலாளர்கள் இரண்டாம்வகுப்பைப் பயன்படுத்துகிறார் கள். எனவே, அதற்கான கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளுமா என்பதை அறிய விரும்புகிறேன்.
மேலும், ஐஆர்சிடிசி ரயில்இ டிக்கெட் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளால் ரயில்வேக்கு மாதந்தோறும் ரூ.10 முதல் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.
எனவே, எதிர்காலத்தில் முறைகேடுகளைத் தடுக்கின்ற வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா என கேள்வி எழுப்பியி ருந்தார்.
இதற்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்து பேசும்போது, ‘‘இந்திய ரயில்வே துறை, பயணிகளுக்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. அதற்காக, இந்த ஆண்டு மட்டும் ரூ.55,000 கோடி தேவைப்படுகின்றது. எனவே, இந்தக் கட்டண உயர்வு என்பது, கடலில் ஒரு துளியைப்போல சிறிய உயர்வுதான். தேவையான நிதியைத் திரட்டுவதில், ரயில்வே துறை முழுமையாகத் தன்னிறைவு அடைய வேண்டும். இல்லை என்றால், பயணிகளுக்குத் தேவையான புதிய வசதிகள் எதையும் செய்து தர முடியாமல் போய்விடும். மேலும், ஐஆர்சிடிசியில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஐஆர்சிடிசி மற்றும் சிஆர்ஐஎஸ் ஆகியவை எங்களுடைய கைகளைப் போன்றவை. எனவே, அவற்றிற்கான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகின்றோம்’’ என தெரிவித்துள்ளார்.