

குடமுழுக்கு பணிகள் தொடங்க உள்ளதால் வடபழனி முருகன் கோயிலில் திருமணத்துக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும், இக்கோயிலில் திருமணம் செய்து கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முகூர்த்த நாட்களில் திருமணம் செய்வதற்கு கோயிலில் கூட்டம் அலைமோதும்.
இங்கு திருமணம் நடத்துவதற்கு 60 நாட்களுக்கு முன்பு இருந்து முன்பதிவு செய்யலாம். திருமணம் செய்வதற்கான கட்டணமாக ரூ.4,176 செலுத்த வேண்டும். திருமணத்துக்கு பதிவு செய்தோருக்கு ஹோம பொருட்கள், குத்துவிளக்கு, திருமண மாலை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தொடங்க உள்ளதால் திருமணங்கள் நடைபெறுவதும், அதற்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயில் வட்டாரத்தில் கேட்டபோது, “குடமுழுக்கையொட்டி மார்ச் 5-ம் தேதி திருப்பணியைத் தொடங்க உள்ளோம். அதன்பிறகு, கோயில் வளாகத்தில் திருமணம் நடத்த முடியாது. ஜனவரி 31-ம் தேதி வரை திருமணம் நடைபெற்றது. இம்மாதம் 1-ம் தேதி முதல் திருமண முன்பதிவை நிறுத்தியுள்ளோம். திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு நடைபெற அதிகபட்சம் 5 மாதங்கள் ஆகும்.
திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் குடமுழுக்கு தேதி முடிவு செய்யப்பட்டுவிடும். தேதி முடிவு செய்யப்பட்டவுடன் வழக்கம்போல திருமணத்துக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கும்" என்றனர்.