

தமிழக காவல் நிலையங்களில் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அதனை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிவிறக்கம் செய்யவும் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக 2 மாதங்களில் முடிவெடுக்க உள்துறைச் செயலர், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை செல்லூர் கீழத்தோப்புப் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.காசிராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தங்கள் மீது அளிக்கப்படும் புகார் விவரம், அந்தப் புகார் எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு குற்றம்சாட்டப்பட்டோர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்குவது இல்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நகல் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற விதியைக்கூட போலீஸார் பின்பற்றுவது இல்லை. இதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
முதல் தகவல் அறிக்கை பெறுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, தமிழகத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை, பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அந்த இணையதளத்தில் இருந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பழ.ராமசாமி வாதிட்டார்.
விசாரணைக்குப் பின், முதல் தகவல் அறிக்கை நகல் பதிவேற் றம் மற்றும் பதிவிறக்கம் தொடர்பான மனுதாரரின் கோரிக்கையை 2 மாதங்களில் பரிசீலித்து உள்துறைச் செயலர், தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோர் உரிய உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.