

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருக்கும் வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்ததாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:
கேரள மாநிலம் விதுராவில் பெயரளவுக்கு கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த செய்யது அலி, அதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தகவல்களை பரிமாறி வந்துள்ளார். அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரை இயக்கிய கடலூரைச் சேர்ந்த கஜாமொய்தீனுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் குண்டு வைத்து அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனர்.
எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக பெங்களூருவில் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே வில்சன் கொலையைத் தொடர்ந்து பலரும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டதால், திட்டமிட்டபடி நாசவேலையை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. இத்தகவல்கள் அனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.