Published : 10 Feb 2020 08:35 AM
Last Updated : 10 Feb 2020 08:35 AM

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் சிறப்பம்சங்கள்

சேலம்

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

இதில் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப்பண்ணைப் பிரிவில் நாட்டின மற்றும் கலப்பின கறவைப் பசு பண்ணைகள், செம்மறி மற்றும் வெள்ளாட்டுப் பண்ணைகள், வெண் பன்றிப் பண்ணை, நாட்டுக் கோழிப் பண்ணை மற்றும் நாட்டின நாய்களின் இனப்பெருக்கப் பிரிவுஉள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.

கால்நடை உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்தும் பிரிவில், பால் பதப்படுத்தும் நிலையம், பால் பொருட்கள் உற்பத்தி நிலையம், ஆடு, கோழி மற்றும் வெண் பன்றி இறைச்சி உற்பத்திக் கூடங்கள், கால்நடைத் தீவன உற்பத்தி ஆலைமற்றும் தாதுக்கலவை தயாரிப்புஆலை ஆகியவை அமையஉள்ளன.

மீன்வளப் பிரிவில், தீவன முறை மீன் குஞ்சு உற்பத்தி மையம், மீன் உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த காய்கறி வளர்ப்பு மற்றும் உயர் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் ஆகியவை அமையவுள்ளன.

விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகத்தில், கால்நடை வளர்ப்பின் பல்வேறு திறன்கள் குறித்த பயிற்சி மையம், ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு முறைகள், பண்ணையாளர்கள் பயிற்சி பெற ஏற்ற மாதிரி கால்நடைப் பண்ணைகள், கால்நடைப் பண்ணை உபகரணத் தயாரிப்பு மையம் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கும்விடுதிகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

தொழில் உருவாக்கப் பிரிவு, பண்ணையாளர்களுக்கான பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியதொடர் ஒருங்கிணைப்பு மையம்ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன. ஆராய்ச்சி பூங்கா மூலமாக சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஓராண்டுக்குள் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கப்படும்.

கால்நடை மருத்துவக் கல்லூரி

கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் ஆண்டுதோறும் 80 மாணவர்கள் இணைந்து பயிலும் வண்ணம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டப்படுகிறது. இது, வரும் 2020-21-ம் கல்வி ஆண்டு முதல் செயல்பட தொடங்கும். கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை இனப்பெருக்கத் தொழில் பிரிவுகளில் கால்நடை மருத்துவ முதுநிலை மற்றும் பி.எச்.டி. பட்டப் பிரிவுகளுக்கான உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

உயர் ஆராய்ச்சி நிலையத்தின் முகப்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வசதிகளுடன் கூடிய பாலகம், சிறுவர் பூங்கா, இறைச்சி மற்றும் மீன் விற்பனைக் கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

வேளாண் கண்காட்சி

பாரம்பரிய நாட்டினங்களான காங்கயம், பர்கூர், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, சிந்து, தார்பார்க்கர் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டு காளைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நினைவூட்டும் வகையில், 10 அடி உயரம் கொண்ட காளை பொம்மையுடன் கூடிய, வாடிவாசல், பிரம்மாண்டமான பசு-கன்று சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விவசாயத்துக்கு தேவையான நவீன தொழில்நுட்பக் கருவிகள், பூச்சி மருந்து தெளிக்க உதவும் ஆளில்லா விமானங்கள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,1 மாத கரு, 3 மாத கரு, 5 மாதகரு என கருவில் இருக்கும் கன்றுக்குட்டிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள், மீன்வளத் துறை சார்பில் பல்வேறு வகை மீன்களைக் கொண்ட கண்காட்சி, வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சிறுதானிய உணவு வகைகள், பால் பொருட்கள் என 224 அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

சால்வை அணிவித்த முதல்வர்;
அதிகாரிகள் மகிழ்ச்சி


தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததால் முதல்வர் மகிழ்ச்சியடைந்தார். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் சண்முகம், கால்நடை பராமரிப்புத் துறை அரசின் முதன்மை செயலர் கோபால், வேளாண்மைத் துறை அரசின் முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பாலசந்திரன் உள்ளிட்டோருக்கு முதல்வர் பழனிசாமி விழா மேடையில் சால்வை அணிவித்து கவுரவித்தார். முதல்வர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x