Published : 10 Feb 2020 08:34 AM
Last Updated : 10 Feb 2020 08:34 AM

வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: காவிரி டெல்டாவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், அவற்றை முறியடிக்கும் வகையில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது முதல்வரின் அரசியல் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அம்மாவட்ட விவசாயிகளுக்கு கிடைதக்கப் போகும் நன்மைகள் ஏராளமானவை. காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் எதிர்காலம் இனி ஒளிமயமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றியாகும். நெடுவாசலில் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் தமிழக மக்கள் விரும்பாத எந்தத் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தாது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாமக தலைவர் ஜி.கே.மணி: தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை தரணியான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் தலைமையில் பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. பிரதமரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின்போது பாமக முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் இது முக்கியமான கோரிக்கையாகும். முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் போதெல்லாம் ராமதாஸும், அன்புமணியும், நானும் இதை வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதல்வர் அறிவித்திருப்பதை பாமக சார்பில் வரவேற்கிறோம்.

சமக தலைவர் சரத்குமார்: விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என உறுதிபட முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாய தொழில் லாபகரமானதாகவும், தமிழகத்தில் பசுமைப்புரட்சி மேலோங்கி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு அடிகோலுவதாகவும் இந்த அறிவிப்பு அமையும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தால் டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை என்று அறிவித்திருப்பது ஒட்டு மொத்த தமிழக விவசாய வளர்ச்சிக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பயன் தரும்.

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர்: இதன்மூலம் காவிரி பாசனப் பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினை, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சட்டமாக நிறைவேற்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இதுவெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் முறையான சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் எட்டுவழிச்சாலை திட்டம், நியூட்ரினோ ஆய்வகம் போன்றவற்றையும் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்: முதல்வர் அறிவிப்பை வரவேற்றுப் பாராட்டுகிறேன். சட்டரீதியாக இதை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம்: இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x