

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவாக ரூ.1,022 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆசியாவின் பிரமாண்ட கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-
அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது கால்நடைப் பூங்காவை பார்த்த பின் தமிழகத்திலும் அதுபோல் அமைக்க எண்ணினேன்.
கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது.
அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது.
தமிழக அரசு தேசிய விருது பெறுவது எவ்வளவு பெரிய பெருமை, எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் அது பிடிக்கவில்லை. தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின்.
நமக்கு நாளை எதிர்காலம் உண்டா என பயந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்தது திமுக அரசுதான். ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.