‘தமிழகம் என்னுடைய கர்ம பூமி, ஆந்திரா ஜென்ம பூமி’: தெலுங்கு சமூகத்தினரை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கம் - முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தகவல்

‘தமிழகம் என்னுடைய கர்ம பூமி, ஆந்திரா ஜென்ம பூமி’: தெலுங்கு சமூகத்தினரை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கம் - முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக உருவாக்குவேன் எனதமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்தார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பா.ராமமோகன் ராவ். இவர் கடந்த 6 மாதங்களாகப் பல்வேறு சமுதாயத் தலைவர்கள், இளைஞர்களை சந்தித்து வருகிறார். இதில் பல சமுதாய அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அரசியல் ரீதியாகக் கிடைக்கும் முக்கியத்துவம், புறக்கணிப்பு குறித்த வரலாற்று ஆதாரங்களை முன்வைத்துப் பேசி வருகிறார்.

மதுரையில் 2 நாட்களாக தங்கியிருந்த அவர் தென் மாவட்ட சமுதாயத் தலைவர்கள் பலரை சந்தித்தார். தெலுங்கு சமுதாயம் அரசியல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து நாயுடு, நாயக்கர் கூட்டமைப்பு சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் 437-வது பிறந்த நாள் விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம மோகன ராவ் பங்கேற்றார். இவ்விழாவில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

முன்னதாக மதுரை மேலூர் சாலையில் உள்ள ஓட்டலில் இருந்து ராம மோகன ராவ் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மதுரை மஹால் முன்பு உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அரசியல் கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் வரவேற்பைப்போல் சமூகத்தினர் ஆரவாரம் செய்து கோஷங்களையும் எழுப்பினர்.

பின்னர் ராம மோகன ராவ்செய்தியாளர்களிடம் கூறியதாவது:தெலுங்கு மக்களை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாகவும், கலாச்சாரப் பண்பாட்டு இயக்கமாகவும் உருவாக்க உள்ளேன். இதில் உள்நோக்கம் எதுவும்இல்லை. மிகப்பெரிய நோக்கத்துக்காக இந்த கலாச்சாரப் பண்பாட்டு இயக்கம் உருவாக்கப்படும்.

ஜெயலலிதா மிகவும் வேண்டியவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு மிகவும் வேண்டியவர். அதேநேரம், தற்போது நடக்கும் ஆட்சிப் பக்கம் நான் போக விரும்பவில்லை. நான் உருவாக்கும் அமைப்பு விழிப்புணர்ச்சி இயக்கமாக செயல்படும். அரசியலில் இறங்குவது அடுத்த கட்டம்.

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நல்லது செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பண்பாட்டுரீதியில் விழா கொண்டாடப்படும். கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. என் திட்டம் சமுதாயப் பணியை நோக்கியது.

தமிழகம் என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஜென்ம பூமி.தமிழகத்தில் சமுதாயப் பணியை உயிர் உள்ளவரை தொடர்வேன். தேசிய அரசியல் என் நோக்கம் அல்ல. தமிழகத்தில் சமுதாயப் பணியை மட்டுமே செய்வேன். தேசிய அரசியலைவிட தமிழகம்தான் என்னை வாழ வைத்த பூமி. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in