

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்டவருமான வரித்துறை சோதனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியுரிமை சட்ட மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவ்விஷயத்தில் நாட்டு நலனை நினைக்காமல், ஓட்டு நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது இப்போக்கு கண்டிக்கத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும். பாஜக, அதிமுக கூட்டணி தொடரும். ராஜீவ்காந்தி கொலையை சாதாரண கொலையாக கருத முடியாது. 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் முடிவு குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித் துறை சோதனை விஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. வருமான வரித் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியது.
எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை. நெய்வேலி சுரங்கம்பாதுகாக்கப்பட்ட பகுதி. தடைசெய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்றுதான் பாஜக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர் என்றார். மாநில சட்டத்துறை அமைப்பாளர் பழனிசாமி,மாநில செயலாளர் டாக்டர் சரஸ்வதி, மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன் உடனிருந்தனர்.