காலணிக்கும் காலுக்கும் இடையே மாட்டிக் கொண்ட குச்சியை எடுக்கச் சொன்னார், அவரால் குனிந்து எடுக்க முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக் குறித்து முதல்வர் பழனிசாமி

காலணிக்கும் காலுக்கும் இடையே மாட்டிக் கொண்ட குச்சியை எடுக்கச் சொன்னார், அவரால் குனிந்து எடுக்க முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக் குறித்து முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவரிடம் பழங்குடி சிறுவன் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். அவருக்கு சுமார் 70 வயதாகின்றது. அவர் அணிந்திருந்த காலணிக்கும், காலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட குச்சியை குனிந்து எடுக்க முடியவில்லை. அதனால் அருகாமையில் இருந்த சிறுவனை அழைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கின்றார். அதை அவர் தெளிவாக தெரிவித்ததுடன், அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். மேலும் அந்த சிறுவன் என்னுடைய பேரன் போல் இருக்கின்றார். உதவிக்கு தான் அழைத்தேன் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் அதை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். இதனை ஊடகங்களும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்துவது உண்மையிலேயே வேதனை அளிக்கின்றது. அ.தி.மு.க. அமைச்சர்களோ, நிர்வாகிகளோ யாரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடமாட்டார்கள்” என்று கூறினார்.

அதே போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்துத்துவா அமைப்பினர் போல் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளனரே என்ற கேள்விக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,

“ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவர் பக்திமான். அது நன்றாக தெரியும். அவர் அவருடைய சொந்த கருத்தை சொல்லியிருக்கலாம். அது அ.தி.மு.க.வின் கருத்து அல்ல என்பதை எங்களுடைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தியிருக்கிறார்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in