

சிவனை வழிபட்டதற்காக கிண்டல் செய்த சீமான், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தது, வடிவேலு பட காமெடியைவிட வேடிக்கையாக இருக்கிறது என்று நடிகை விஜயலட்சுமி விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி. ‘கலகலப்பு’, ‘வாழ்த்துகள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தன்னை காதலித்ததாகவும், குடும்பம் நடத்தியதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டை வைத்தார். சீமானின் அரசியல் செயல்பாடுகளையும் விஜயலட்சுமி அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இந்த சூழலில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற கடந்த பிப்ரவரி 5-ம் தேதி மாலை சீமான், பெரிய கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
“பெரிய கோயில் கோபுர கலசத்துக்கு தமிழிலேயே எங்கள் சிவனடியார்கள் குடமுழுக்கு செய்திருப்பது மகிழ்ச்சி. இது, எங்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி. இனி வரும் காலங்களில் தமிழகத்தின் எல்லா கோயில்களிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று அப்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலுக்கு சீமான் வந்து சுவாமி தரிசனம் செய்ததை ஒரு வீடியோ பதிவு மூலம் விஜயலட்சுமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
என்னை நினைவிருக்கிறதா சீமான். என் பெயர் விஜயலட்சுமி. ‘அப்படி ஒருவரையே தெரியாது’ என்பீர்கள். ‘வாழ்த்துகள்’ படப்பிடிப்பின்போது சிவனை வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து வருவேன். ‘கார்த்தாலயே பட்டை அடிச்சுக்கிட்டு வந்துருவீங்களா?’ என்று கேட்டு, எல்லோருடனும் சேர்ந்துகொண்டு விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். இதை மற்றவர்களிடம் கூறி விமர்சனமும் செய்வீர்கள். ஆனால், கிறிஸ்தவர் சைமனான நீங்கள் இன்று சீமானாக மாறி பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள்.
சிவனை வழிபட்டதற்காக என்னை கொடுமை செய்யவில்லை என்று உங்கள் மனைவி, பெரியார், பிரபாகரன் என யார் மீதானாலும் பொய் சத்தியம் செய்வீர்கள். உங்கள் மகன் மீது சத்தியம் செய்துதர முடியுமா?
இப்ப நீங்க அதேபோல பட்டை அடிச்சுக்கிட்டு பிரகதீஸ்வரர்கிட்ட போன காமெடித்தனம், வடிவேலு பட காமெடியைவிட பெரும் வேடிக்கையாக இருக்கிறது. உங்க ஆட்டத்தை எல்லாம் இதோட நிப்பாட்டிக்குங்க.
இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார். வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.