Published : 09 Feb 2020 10:02 AM
Last Updated : 09 Feb 2020 10:02 AM

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வராததற்கு மத்திய அரசு எந்த வகையிலும் காரணம் அல்ல: சென்னையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வராததற்கு காரணம் மத்திய அரசு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தொழில் வர்த்தக சபை, தொழில்துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள் உள்ளிட்டோரை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகளுடன் சென்று சந்தித்து, மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். இதுதொடர்பான கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

விவசாயிகள், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்க வழங்கப்படும் ரூ.20 லட்சத்தில் எவ்வளவு தொகை மானியம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தமிழகம் உட்பட எந்த மாநிலத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நிறுத்திவைக்கப்படவில்லை. 2 தவணைத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது. அத்தொகை விரைவில் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி வசூல் கடந்த 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வசூல் தொடர்பாக நீதிமன்றங்களில் 4 லட்சத்து 19 ஆயிரம் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில், விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி குறைக்கப்படவில்லை.

எல்ஐசி.யில் மத்திய அரசு வசம் உள்ள பங்குகளில், எத்தனை சதவீதம் பங்குகளை மக்களுக்கு விற்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பங்குகள் விற்பனை மூலம் எல்ஐசி.யில் மக்களின் பங்களிப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, சீர்திருத்தம் போன்ற பலன்கள் கிடைக்கும். மேலும், எல்ஐசி.யில் தானும் ஒரு பங்குதாரர் என்று உணர்வு மக்களுக்கு ஏற்படும். அதன் பொதுக்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கலாம்.

வருமான வரியை எளிய முறையில் செலுத்துவதற்காக மின்னணு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வரி செலுத்துவதற்காக பொருளாதார நிபுணரையோ, தணிக்கையாளரையோ அணுகத் தேவையிருக்காது.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நிதி அமைச்சக அறிக்கை அல்ல. அது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் அறிக்கை அவ்வளவுதான். அதற்காக அந்த அறிக்கையை நாங்கள் ஒதுக்கவில்லை. ஊட்டச்சத்துக்கான மானியம் குறைக்கப்படவில்லை. ஊட்டச்சத்துக்காக ஒரு இயக்கத்தையே தொடங்கியது இந்த அரசு.

கடந்த ஜூலை மாதம் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி, ஏராளமான விஷயங்களை ஆய்வு செய்து நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது. நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது. அதை நிச்சயம் செய்வோம்.

ஜிஎஸ்டி கொண்டு வந்தபோதே அதன் வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வந்துவிட்டோம். ஆனால், அதை நிறைவேற்ற வேண்டுமானால் ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்துகொள்ளும் மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். விவசாயம் மற்றும் கிராமங்கள் மேம்பாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். கடந்த ஆண்டைவிட இது அதிகம்.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது நிதி அமைச்சக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x