

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் - அதாலத்தில் 50,266 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ.397 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. நிலுவை வழக்குகள் மற்றும் விசாரணைக்கு முந்தைய வழக்குகள் என மொத்தம் 50,266 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், சி.வி.கார்த்திகேயன், எம்.தண்டபாணி, சி.சரவணன் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, வி.பவானி சுப்பராயன், டி.கிருஷ்ணவள்ளி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதுதவிர மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் வங்கி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டும் 18 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 495 அமர்வுகள் என மொத்தம் 521 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் ரூ.397.60 கோடி அளவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மாநில அளவிலான லோக் - அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் - அதாலத்தில் 15,567 நிலுவை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ரூ.41 கோடிக்கு அளவில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான லோக் – அதாலத் பணிகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், நீதிபதியுமான ஐ.ஜெயந்தி செய்திருந்தார்.