ராமர் கோயில் கட்டும் பணி; அயோத்தியில் விரைவில் தொடங்கும்: ராமேசுவரத்தில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் தகவல்

ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்த உத்தரப்பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்த உத்தரப்பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். கோயிலில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் கோயில் பிரகாரங்களை பார்வையிட்டார். அதன்பிறகு ராமேசுவரம் பள்ளி வாசல் தெருவில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தச் சட்டம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 2014, 2019-ம்ஆண்டுகளில் எப்படி பாஜக மக்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்ததோ அதேபோல 2024-ம் ஆண்டிலும் மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடிக்கும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் இருந்ததால், அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றினோம். அதேபோல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இன்னும் 35 நாட்களில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை பணிகளைத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in