

குரூப் 2, பொறியாளர் பதவிகளுக்கான தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் 1997-ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டிட கலைஞர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 39 பேரில் சென்னை மையத்தில் இருந்து மட்டும் 31 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக தேர்வாணையம் முழுமையாக ஆய்வு மேற்கொண்டதில் தவறு எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் குறிப்பிட்ட புகார்கள் மீது தேர்வாணையம் உடனே ஆய்வு செய்து தவறுகள் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்து வருகிறது.
வரும் காலத்திலும் டிஎன்பிஎஸ்சியின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது. இதுகுறித்த தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.