Published : 08 Feb 2020 09:10 PM
Last Updated : 08 Feb 2020 09:10 PM

மருத்துவர் சங்க தலைவரின் மரணம்; தமிழக அரசு ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம்: ஜி.ஆர்.ரவீந்திரநாத்


அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.லட்சுமி நரசிம்மன் மரணத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்த்தின் தலைவர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:


“ காலமுறை ஊதிய உயர்வு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற ,இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறையை காரணம் காட்டி மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து ,பொதுமக்களை பாதிக்காமல் பலகட்டப் போராட்டங்கள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது.

மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவோம் என வாக்குறுதி தந்த ,தமிழக அரசு அதை நிறைவேற்றாமல் வஞ்சித்துவிட்டது. எனவே,தவிர்க்க முடியாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற ஆண்டு அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 காலை வரை, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தினர்.

அப் போராட்டத்தின் பொழுது, துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் , அந்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப் பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது,எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற வாக்குறுதியையும் அமைச்சர் அளித்தார். ஆனால், அவற்றை எல்லாம் மீறி, 120 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை, அரசு இடமாறுதல் செய்தது.

துறைகளை மாற்றியும், இயக்கங்களை மாற்றியும் தொலை தூரத்திற்கு மருத்துவர்கள் இட மாறுதல் செய்யப்பட்டனர். பலருக்கு , ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் (17B) அனுப்பியது. அரசின் பழிவாங்கலால் டாக்டர் என்.லட்சுநரசிம்மனும் பாதிக்கப்பட்டார். அரசின் இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம். இதற்கு, தமிழக அரசு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த இறப்பிற்குப் பிறகாவது,தமிழக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
# அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
# அரசு மருத்துவர்கள் முன் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அரசு மருத்துவர்கள் ,கடும் பணிச் சுமையாலும் , 24 மணி நேர தொடர் வேலை காரணமாகவும், வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முறை தொடர் 24 மணி நேர பணி செய்வதாலும், பணியிடங்களில் நடைபெறும் அவமதிப்பு போன்றவைகளாலும், போதிய ஓய்வு இல்லாமையாலும், மன உளைச்சலுக்கு ஆளாகி ஏராளமான மருத்துவர்கள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்; இறக்கின்றனர். இதற்கு தமிழக அரசே காரணம்.

எனவே ,

# 24 மணி நேரம், தொடர்ந்து பணியில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

# போதிய மருத்துவர்களை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடியாக நியமிக்க வேண்டும்.

# அரசு மருத்துவர்கள் இறந்தால் ,அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணமாக ( Corpus fund) ரூ 1 கோடி நிதி வழங்க வேண்டும்.

# அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் உடல் மற்றும் மன நலனை பாதுகாத்திட, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட, தகுந்த ஊதியம் நிர்ணயித்திட, பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்திட ,உழைப்புச் சுரண்டலை ஒழித்திட,பணியினால் வரக்கூடிய தொழில் வழி நோயிலிருந்து (Occupational diseases) பாதுகாத்திட ,இளம் வயது மரணங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளிலிருந்து காத்திட, மருத்துவர்களுக்கு என தனி நல வாரியத்தை ( welfare board) தமிழக அரசு உருவாக்கிட வேண்டும்.

# பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை ,மாணவர்களாகக் கருதாமல், குறைந்த ஊதியத்தில் கிடைத்த அடிமைகள் போல் நடத்துவது கண்டனத்திற்குரியது. அவர்களிடம் 36 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை வாங்கப்படுகிறது.மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்.

அவமானப் படுத்தப்படுகிறார்கள். வழங்கப்பட வேண்டிய விடுமுறைகளும் வழங்கப் படுவதில்லை.குறைவான பயிற்சிகால ஊதியமே வழங்கப்படுகிறது.அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. இதனால் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கபடுகின்றனர்.

இதன் காரணமாக பல முது நிலை மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.முதுநிலை மருத்துவ மாணவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்காணித்திட தனி கண்காணிப்பு குழுக்களை அமைத்திட வேண்டும்.

# அகில இந்தியத் தொகுப்புக்கு ,மாநில அரசுகள் , இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு இடங்களை வழங்குகின்றன. அவற்றில் 27 விழுக்காடு இடங்ளை, இதரப் பிற்படுத்தப் பட்டோருக்கு ,2007 ஆம் ஆண்டு முதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அது வழங்கப்பட வில்லை. இதனால் , இதர பிற்படுத்தப் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன்.இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மத்திய அரசை உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x