

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்ட பல்லாயிரக்கணகக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ பக்திகோஷமிட்டு வலம் வந்தனர்.
தீர்த்தவாரி
முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுஅதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திரத்தேவருக்கு சண்முகவிலாச மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருவீதி உலா
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்தபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வடக்குரதவீதியில் தைப்பூச மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலையில் அங்கிருந்து சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தார்.
குழுவாக வலம் வந்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினத்திலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்து குழு குழுவாக கோயிலை வலம் வந்தனர். இதனால் கோயில் வளாகத்திலிருந்து நாலாபுறமும் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் காணப்பட்டது.
நீண்ட வரிசை
பக்தர்கள் அதிகாலையிலிருந்து கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடினர். ரூ.250 ரூ.100, ரூ.20 கட்டண தரிசனத்திலும் பொது தரிசனத்திலும் நீண்ட வரிசையில் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் கடற்கரை, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்கள் காவடி எடுத்து, வேல்கள் அலகு குத்தியும் பஜனை பாடல்களை ஆடிபாடி வலம் வந்தனர். மேலும் சில பக்தர்கள் அதிகாலையிருந்து கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கடலில் அரண் அமைத்து பாதுகாப்பு
கடலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு படகில் மீட்புக் குழவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அதே போல் கடற்கரையில் மணல் கோபுரம் எழுப்பி சூடம் ஏற்றி வழிபட்டனர். பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோயில் முகப்பில் ஆடிப்பாடியது பரவசத்தை ஏற்படுத்தியது.
குடிநீருக்காக பரிதவித்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வரிசையும் நீண்டு கொண்டே சென்றது. அதிலும் பொதுதரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு கோயில் பிரகாரத்தில் வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில் சென்ற பக்தர்ள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த பக்தர்கள் பகல் நேரத்தில் தண்ணீர் தாகத்தில் தத்தளித்தனர். பிரகாரத்தில் சென்ற பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யாததால் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர்.