

தைப்பூச திருவிழாவை ஒட்டி பழநி நகரம் விழாக்கோலம் பூண்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (08.02.20) மாலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது.
பழநி முருகனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் வருகையால் பழநி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை தேரோட்டமும் நடைபெறுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களை பாதுகாக்கும் வகையில் 3500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.