Last Updated : 08 Aug, 2015 08:33 AM

 

Published : 08 Aug 2015 08:33 AM
Last Updated : 08 Aug 2015 08:33 AM

காந்தியவாதி சசிபெருமாள் உடல் சொந்த ஊரில் அடக்கம்: அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மேட்டுக்காட்டில் உள்ள சொந்த ஊரில் காந்தியவாதி சசிபெரு மாளின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி நாகர்கோவில், உண்ணாமலைக் கடையில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி சசிபெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட போது இறந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் காந்தியவாதி சசிபெருமாளின் உடல் கடந்த 7 நாட்களாக குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வதாக அவரது குடும்பத்தினர் கூறி, போராட்டம் செய்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலன் காக்கும் கூட்டமைப்பு சார்பில், சசிபெருமாளின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சசிபெருமாளின் உடலை பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடலை அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு நேரில் பெற்றுக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 520 கிமீ தொலைவுக்கு ஊர்வலமாக சசிபெருமாளின் உடல் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உடன் வந்தார். நேற்று காலை 11 மணிக்கு சேலம் மாவட்டம் வந்தடைந்து, சசிபெருமாளின் சொந்த ஊரான இடங்கணசாலையில் உள்ள மேட்டுக்காட்டில் பகல் 12.15 மணிக்கு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சசிபெருமாளின் உடலை பார்த்து மனைவி மகிளம், மகள் கவியரசி, மகன்கள் செல்வம், நவநீதன், சகோதரர்கள் செல்வம், வெங்கடாசலம் மற்றும் உறவினர் கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சசிபெருமாளின் உடலுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தற்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டனர். மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 31-ம் தேதி சசி பெருமாள் போராட்டத்தில் இறந்த நிலையில், 7 நாட்கள் கழித்து நேற்று சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அஞ்சலி செலுத்த இடங்கணசாலை, இளம்பிள்ளை, சிவதாபுரம், நாகியம்பட்டி, சித்தர்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்திருந்தனர். நேற்று மதியத்தில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், அவரது வீட்டின் அருகில் உள்ள சொந்த இடத்தில் சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப் பட்டது.

உண்ணாவிரதத்தை முடித்தார் சசிபெருமாளின் மகன்

சசிபெருமாளின் இறுதி அஞ்சலி கூட்டம் மாலை 5.30 மணிக்கு பல்வேறு கட்சித் தலைவர்களின் இரங்கல் உரையுடன் முடிந்தது. அதன்பின், சசிபெருமாளின் உடல் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி முடிவடைந்த நிலையில், அவரது உடல் 6 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

பூரண மதுவிலக்கை அமல் படுத்தினால் மட்டுமே சசிபெரு மாளின் உடலை பெற்றுக் கொள் வோம் என 7 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வந்த அவரது மூத்த மகன் விவேக், தந்தை சசி பெருமாளின் அடக்கம் முடிந்ததும், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், சசிபெரு மாளின் மகன் விவேக்குக்கு பழ ரசம் அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

மதுவுக்கு எதிராக மக்களிடம் எழுச்சி: அஞ்சலி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

‘காந்தியவாதி சசிபெருமாள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்ட களத்தில் மரணமடைந் தார். அவரின் மரணத்தால் தமிழக மக்களிடையே மதுவிலக்கு வேண்டு மென்ற உணர்வு மேலோங்கி உள்ளது’ என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலம் இடங்கணசாலை மேட்டுக் காட்டில் உள்ள சசிபெருமாள் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி போராட்ட களத்திலேயே சசிபெருமாள் மரணமடைந்துள் ளது, தமிழக மக்களிடையே மது விலக்கு வேண்டுமென்ற உணர்வை மேலோங்கச் செய்துள்ளது. மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சசிபெருமாளின் குடும்பத்துக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

எந்த கொள்கைக்காக, லட்சியத்துக்காக அவர் இறந்தாரோ, அந்த கொள்கை நிறைவேற தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.

திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி

சசிபெருமாள் குடும்பத்தினரை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தபோது, அவரது குடும்பத்துக்கு நிதி உதவியாக ரூ.10 லட்சத்தை ரொக்கமாக சசிபெருமாளின் மனைவி மகிளத்திடம் வழங்கினார்.

நினைவு மண்டபம் கட்ட ரூ. 5 லட்சம் நிதி

சசிபெருமாள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமீம் அன்சாரி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விவேக்கிடம் வழங்கினர்.

தலைவர்கள் இரங்கல்

காந்தியவாதி சசிபெருமாள் இறுதி அஞ்சலி கூட்டத்தில் அதிமுக தவிர்த்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சசிபெருமாளின் பூரண மது விலக்கு கொள்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண் டும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, பூரண மதுவிலக்கு கொள்கைக்காக ஓரணியில் இருந்து போராட வேண்டும். மது குடிக்காதவர்கள் மட்டுமல்லாமல், மதுப்பழக்கத்துக்கு அடிமை யானவர்களும், மதுவை ஒழிக்க போராட வேண்டும். மதுவிலக்கு வேண்டி மக்களும், கட்சிகளும் போராடி கொண்டிருக்கும் வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மவுனம் சாதிக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:

சசிபெருமாளை இழந்ததைபோல உண்ணாவிரதம் இருந்த அவரது மகன் விவேக் உயிரையும் நாம் இழந்துவிடக் கூடாது என்பதற் காகவே, சசிபெருமாள் உடலை பெற்றுக் கொண்டோம். முன்பை காட்டிலும் மேலும், இப்போராட் டத்துக்கு வலுவூட்டி பூரண மதுவிலக்குக்காக போராடுவோம். அவரது மகன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார். இனி, ஒவ்வொருவரும் பூரண மதுவிலக்கு வேண்டி, அவர்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட போராட வேண்டும்.

பாமக கட்சி தலைவர் ஜி.கே.மணி:

சசிபெருமாளின் கொள்கையை ஏற்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு மூட வேண்டும். தமிழக மக்கள் நலன் பெற, பூரண மதுவிலக்கு ஒன்றே நல்ல தீர்வாக இருக்கும். இதனை அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:

மதுவால் பாதிப்படைந்தவர்கள் இனி இல்லை; மது ஒழிப்புக்காக போராடி மாண்டவர்கள் இனி இல்லை என்ற காலம் உருவாக வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் போது, தமிழகத்தில் பூரண மது விலக்கு கொள்கை அமல்படுத்த அழுத்தம் கொடுக்கப்படும்.

வணிகர் பேரவை சங்கத் தலைவர் வெள்ளையன், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசிகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x