வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்பாலாஜி தவிர்த்து 12 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் அருண்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி செந்தில் பாலாஜி மீதான வழக்கை போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நேற்று நடந்தது. அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவரும் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்கான 41ஏ நோட்டீஸை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த நோட்டீஸ் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அவரது தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in