

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்தது. அந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் ‘பிகில்’ படம் வசூல் சாதனை படைத்ததாக தெரிவித்தது.
இந்நிலையில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள், ‘பிகில்’ பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 5-ம் தேதி சோதனையை தொடங்கினர். இதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்தசினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் மதுரை மற்றும் சென்னை வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்‘பிகில்’ படத்தின் தென் மாவட்ட விநியோக உரிமையைப் பெற்றிருந்தார்.
வருமானவரி சோதனையில் ‘பிகில்’ பட தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கின. அதன் அடிப்படையில் விஜய்யும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படபிடிப்பில் இருந்த விஜய்யை வருமானவரித் துறை அதிகாரிகள் கையோடு அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர். கிழக்கு கடற்கரைச்சாலை பனையூரில் உள்ள அவருடைய வீட்டை சோதனையிட்டனர். சுமார் 24 மணி நேரம் தொடர் சோதனை நடத்தினர். மேலும், அசையா சொத்துகளில் செய்த முதலீடு, படங்களில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் போன்றவை குறித்து விஜய்யிடம் கேள்வி எழுப்பி, அவர் அளித்த பதிலை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர்.
அதேபோல், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.77கோடி சிக்கியது. மேலும் ரூ.300கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் சென்னை தியாகராயர் ராகவையா தெருவில்உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து 3-வதுநாளாக நேற்றும் சோதனை நீடித்தது. அன்புச்செழியன் அலுவலகத்தில் நடந்த சோதனை மதியம் 1 மணியளவில் நிறைவடைந்தது. இதில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
வங்கி மேலாளரிடம் விசாரணை
அன்புசெழியன் வீட்டில் கிடைத்தஆவணத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் மேலாளர் ஒருவரையும், அன்புச்செழியன் வீட்டுக்கு வரவழைத்து, அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதற்கிடையே, சென்னை தியாகராயநகர், திருமலை சாலையில் உள்ள கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அவருடைய வீட்டில்சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், ‘பிகில்’ பட குழுவில் இடம்பெற்ற முக்கிய நபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.