

தமிழகத்தில் வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதி திரட்டும் விதமாக,புதிய குடியிருப்புகள் கட்டுவோரிடம் இருந்து, நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் 3 சதவீதம் தொகைவீட்டுவசதி நிதியாக வசூலிக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் மூலம் பல்வேறு குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஏழை மக்களுக்கு மாற்று இடவசதியாகவும், குறைந்த விலையில் வீடு கட்டித்தரும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களுக்கு மத்தியநிதி தவிர, மாநில அரசின் நிதியும் கணிசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டங்களுக்கான நிதியைத் திரட்டுவதில் வாரியங்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றன. இதைப் போக்கும்வகையில் கடந்த 2017-ம் ஆண்டில் வீட்டுவசதி நிதியம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியத்துக்கான சட்டரீதியான நடைமுறைகள் வகுக்கப்படாததால் நிதி திரட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்டத்தின்கீழ், வீட்டுவசதி நிதி வசூலிப்பதற்கான விதிகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அந்த விதிகளின் கீழ் புதிய குடியிருப்பு கட்டுமான பிரிவுகளின் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, கூடுதலாக வீட்டுவசதி நிதியை வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை வீட்டுவசதித் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 3 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது 32 ஆயிரத்து 291.73 சதுர அடிக்கு மேல் தளப்பரப்பு குறியீடு (எப்எஸ்ஐ) கொண்டபுதிய கட்டிடங்கள், ஏற்கெனவே உள்ள கட்டிடங்களில் கூடுதலாக கட்டப்படும் கட்டிடத்தின் தளப்பரப்பு குறியீடு 3 ஆயிரம் சதுர மீட்டரை தாண்டினால் கட்டிடத்தின் தன்மையைப் பொறுத்து நிலத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் வீட்டுவசதி நிதி வசூலிக்கப்படும்.
வர்த்தகக் கட்டிடம் அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவன கட்டிடமாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டருக்கு 1.2 சதவீதம் முதல், அதிகபட்சமாக 3 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பில் இருந்து வசூலிக்கப்படும்.
குடியிருப்பு கட்டிடம் அல்லது தொழிற்சாலை கட்டிடமாக இருந்தால் குறைந்தபட்சம் 1.1 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 3 சதவீதம் வரையிலும், கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் 1 சதவீதத்தில் இருந்து அதிகபட்சமாக 3 சதவீதம் வரையிலும் வசூலிக்கப்பட உள்ளது.
அதேநேரம், தளப்பரப்பு குறியீட்டு அளவில் 10 சதவீதத்துக்கு குறையாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குறைந்தவருவாய் பிரிவினருக்கு கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வீட்டுவசதி நிதி கட்டத் தேவையில்லை. கட்டுமான திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் துறை அலுவலகங்களிலேயே இந்தக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வசதி நிதியத்தை நிர்வகிக்க வீட்டுவசதித் துறை செயலர் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.