

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலாவால் வாங்கப்பட்ட ரூ.1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை வருமானவரித் துறை தொடங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள இவர், கடந்த 2017 பிப்ரவரியில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தபோது, பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674கோடி மதிப்பிலான சொத்துகளை இவர் வாங்கியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தது.
அந்த சொத்துகளில் ஒன்றான ஓஷன் ஸ்பிரே கடற்கரை சொகுசு விடுதி, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி அதிபர் நவீன் பாலாஜிக்கு சொந்தமானது. அவரிடம் இருந்து இந்த விடுதியை ரூ.168 கோடிக்கு சசிகலா வாங்கியிருந்தார். பினாமி பணப் பரிவர்த்தனையில் விற்பனை நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய வருமானவரித் துறை துணை ஆணையர் பிலிப், விற்பனை செய்த நிறுவனத்தை முடக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நவீன் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், வரும் 19-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அறிக்கை தாக்கல்
இதைத் தொடர்ந்து, வருமானவரித் துறை துணை ஆணையர் பிலிப் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓஷன் ஸ்பிரே விடுதி ரூ.168 கோடிக்கு விற்கப்பட்டது. அதில்ரூ.148 கோடிக்கு 500 ரூபாய், 1000ரூபாய் செல்லாத நோட்டுகளை சசிகலா தரப்பினர் கொடுத்துள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்த விடுதிஉரிமையாளர்கள், தங்களது லட்சுமி ஜுவல்லரி வாடிக்கையாளர்கள் மூலம் வந்ததாக தவறான தகவல் தெரிவித்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் சசிகலா பெயருக்கு விடுதி மாற்றப்படாததால், பினாமி பணப்பரிமாற்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து விடுதி இயக்குநர் நவீன் பாலாஜி மற்றும் பங்குதாரர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:
கடந்த 2016-ல் எங்கள் குடும்ப நிறுவனம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால், விடுதியை விற்க முடிவு செய்தோம். அப்போது, அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் மூலமாக சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் அறிமுகமானார். அவர் சசிகலா சார்பில்பேசி, ரூ.168 கோடிக்கு விடுதியை வாங்க ஒப்பந்தம் செய்தார்.
அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், 2017-ல் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று கூறினோம்.
ஆனால், சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் 2016 நவம்பரில் தன் ஆட்களுடன் வந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வற்புறுத்தினார்.
அந்த ஒப்பந்தத்தில் வாங்குபவர் பெயரும் இல்லை. ஒப்பந்தத்தை படித்துப் பார்க்க, நகல் எடுக்கவும் அனுமதிக்கவில்லை. ரூ.148 கோடிக்கு 1000 ரூபாய், 500 ரூபாய்செல்லாத நோட்டுகளை வற்புறுத்தி கொடுத்துவிட்டு, அசல்பங்கு பத்திரங்களை பெற்றுக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பினாமி பணப் பரிவர்த்தனைகள் மூலம் வாங்கப்பட்ட ரூ.1,674 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் வருமானவரித் துறை இறங்கியுள்ளது.