

போக்குவரத்துத் துறையில் ஏற்படுத்தியுள்ள 12-வது ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்களை முழுமையாக அமல்படுத்தக்கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களும் இன்று 12 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளன. இதனால், அரசு பஸ் சேவை பாதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழக அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு 12-வது புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று கையெழுத் தானது. ஆனால், ஊதிய உயர்வைத் தவிர, மற்ற எவ்வித பலன்களையும் அமல்படுத்தவில்லை. சீருடைகள், கல்வி உதவித் தொகை மற்றும் முன்பணம், ஒப்பந்த கால நிலுவைத் தொகை, உதிரி பாகங்கள் பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங் கள் இன்று 12 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழகம் முழுவதும் உள்ள 286 போக்குவரத்து பணிமனைகளில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.’’ என்றார்.
அரசு பஸ் சேவை பாதிக்குமா?
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தொழிற்சங்கங்கள் 22-ம் தேதியன்று (இன்று) தர்ணா போராட்டம் நடத்துவதால், பஸ் சேவை எந்தவிதத்திலும் பாதிக்காது. மாநகர பஸ்களை தடையின்றி இயக்குவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல், பஸ்களை இயக்க தொழிலாளர்கள் இருக்கின்றனர்’’ என்றார்.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் எந்த பாதிப்புமில்லாமல், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களிலிருந்து சென்னைக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.