Published : 08 Feb 2020 07:10 AM
Last Updated : 08 Feb 2020 07:10 AM

கடற்கரையில் 2-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியபோது கணவன் கண் எதிரே அலையில் சிக்கி மனைவி உயிரிழப்பு: ஆச்சரியப் பரிசு கொடுக்க முயன்றபோது விபரீதம்

கடற்கரையில் கேக் வெட்டி திருமண நாளைக் கொண்டாடிய இளம் தம்பதியர், ஆச்சரியப் பரிசு கொடுப்பதற்காக கடலில் இறங்கினர். அப்போது, கணவன் கண் எதிரில் மனைவி அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் வேணி சைலா (27). வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தனியார் நிறுவன ஊழியரான விக்னேஷ் (30) என்பவருக்கும் திருமணமாகி, கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், விக்னேஷ் - சைலா தம்பதியர் தங்களது 2-ம் ஆண்டு திருமண நாளை உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டனர். அதற்காக வேலூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் என 30 பேருடன் புறப்பட்டு சென்னைக்கு வந்தனர். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் அறை எடுத்துத் தங்கினர்.

நேற்று (பிப்.7) திருமண நாள் என்பதால், நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைவரும் பாலவாக்கம் பல்கலை. நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடற்கரை மணல் பரப்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தம்பதியர் சேர்ந்து கேக் வெட்டினர். அவர்களும் ஊட்டிக்கொண்டு, அனைவருக்கும் வழங்கினர்.

பிறகு அனைவரும் கடற்கரையில் அமர்ந்து செல்போன்களில் புகைப்படங்களும், செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் விக்னேஷுக்கு ஆச்சரியப் பரிசு கொடுத்து அசத்த திட்டமிட்ட சைலா, இதற்காக விக்னேஷை அழைத்துக்கொண்டு கடலுக்கு சென்றார். மற்ற அனைவரும் கடற்கரையில் நின்று, உற்சாகக் குரலெழுப்பி அவர்களுக்கு வாழ்த்து கூறியபடி இருந்தனர். கடலில் இறங்கிய விக்னேஷும், சைலாவும் அலையில் கால்களை நனைத்தபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

பெரிய அலை வரும் நேரத்தில், தான் மறைத்து வைத்திருக்கும் மோதிரத்தை எடுத்து, திடீரென விக்னேஷின் கையில் போட்டுவிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தார் சைலா.

அப்போது ஒரு பெரிய அலை எழுந்துவர, மோதிரத்தை எடுத்த சைலா அதை கணவரின் கையில் போட்டுவிட முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவரும் ராட்சத அலையில் தடுமாறி விழுந்தனர். சுதாரித்து எழுந்திருப்பதற்குள், இருவரும் அலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். கரையில் நின்றிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, செய்வதறியாது தவித்தனர்.

சிறிது நேரத்தில், நீந்தியபடி விக்னேஷ் மட்டும் கரை திரும்பினார். அதேபோல, சைலாவும் வந்துவிடுவார் என்று அனைவரும் கடலோரத்தில் இங்கும் அங்கும் தேடினர். ஆனால், வெகு நேரமாகியும் சைலாவைக் காணவில்லை.

உடனே இதுகுறித்து நீலாங்கரை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு, கொட்டிவாக்கம் கடற்கரையில் சைலாவின் சடலம் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

திருமண நாளைக் கொண்டாட குடும்பத்தோடு சென்னை வந்த இடத்தில் கணவர் கண் எதிரே இளம் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x