

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டால் அனைத்து வகையான மோசடிகளையும் தடுக்கலாம் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
வங்கி பரிவர்த்தனை பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக ‘வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற தலைப்பில் குறும்படம் வெளியிடப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து ஆக்சிஸ் வங்கி தயாரித்திருந்த குறும்படத்தில் போலீஸாரே நடித்து விழிப்புணர்வு செய்திருந்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குறும்படத்தை வெளியிட்டு பேசியதாவது:
சைஃபர் கிரைம் தொடர்பான மோசடிகளில் 80 சதவீத புகார்கள் வங்கி மோசடிகள் தொடர்பானவை. இதில் படித்த, நல்ல விபரம் தெரிந்தவர்களே சில நேரங்களில் ஏமாந்து விடுகின்றனர். ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய உள்ளோம் என்ற பயத்தையும், உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்ற ஆசையும் தூண்டி வலை விரிக்கின்றனர். இதில் கவனமுடன் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஏடிஎம் கார்டு, கடன் அட்டை சம்பந்தப்பட்ட தகவல்கள், கடவுச் சொற்கள், கடவு எண்கள் போன்றவற்றை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது. இதுபோன்ற விவரங்கள் குறித்து, கேட்டு வரும் செல்போன் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதன் மூலம் பல்வேறு குற்றங்களைக் கண்டறிய முடிகிறது. அதேநேரம், ஆன்லைன் மோசடிகளைக் கண்டறிவது கடினமாக உள்ளது. இந்த வகை மோசடி குற்றங்களை தடுக்க தேவைப்படும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டால் அனைத்து வகை மோசடிகளையும் தடுக்க முடியும்.
இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆக்சிஸ் வங்கியின் சென்னை வட்ட தலைமை அதிகாரி எல்.ஹரிகுமார், கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன், அருண், ஜெயராம், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.